சங்கமேஸ்வரர் கோவில் தமிழ்நாடு, திருநணா (பவானி) என்னும் ஊரில் உள்ள ஒரு கோயில் ஆகும். பவானி ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் உள்ளது. இறைவன் பெயர் சங்கமேஸ்வரர், இறைவி பெயர் வேதநாயகி அல்லது வேதாம்பிகை.
பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு இரண்டு வாயில்கள். கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது.
வேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. சுப்பிரமணியர் சந்நிதியைக் கடந்து சென்றால் இந்தக் கோவிலின் மூலவரான சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இது ஒரு சுயம்பு லிங்கம். சுப்பிரமணியக் கடவுளாம் முருகனுக்கு அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிக்கு நடுவில் சந்நிதி அமந்திருப்பது இந்தக் கோவிலின் சிறப்பம்சம்.
அம்பிகை வேதநாயகியின் பெருமைக்கு வில்லியம் காரோ என்ற ஆங்கிலேயர் அளித்த தந்தக் கட்டில் ஒன்று சான்றாய்த் திகழ்கிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டுவந்த காலத்தில் வில்லியம் காரோ என்பவர்தான் பவானி பகுதிக்கு கலெக்டராக இருந்தார். அம்பிகை வேதநாயகியின் பெருமையையும் அழகையும் மக்கள் வியந்து பேசுவது கண்ட காரோ தாமும் அம்பிகையைக் காண விரும்பினார். இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்லலாம் என்பதால், மதில் சுவரில் சாளரம் பொன்று மூன்று துளைகளைச் செய்து காரோ அதன் மூலம் அம்பிகையைக் காண வழி செய்தனர். காரோவும் அம்பிகையை அச்சாளரத்தின் மூலம் தினந்தோறும் கண்டு வழிபட்டு வந்தார். அந்தத் துளைகள் இன்றுமுள்ளன. ஒருமுறை காரோ தனது இல்லத்தின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது அம்பிகை வேதநாயகியைப் போன்று வடிவுடைய பெண் ஒருத்தி அவரைத் தட்டி எழுப்பி கையைப் பற்றி விரைவாக வெளியே அழைத்துச் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டு திடுக்கிட்டு விழித்து எழுந்த காரோ பரபரப்புடன் மாடியிலிருந்து கீழே ஓடினார். அடுத்த நிமிடமே காரோ குடியிருந்த இல்லத்து மாடி இடிந்து கீழே விழுந்தது. தான் பிழைத்தது அம்பிகையின் அருள் என்று போற்றி, அம்பிகைக்கு தந்தத்தால் ஆன கட்டில் செய்து காணிக்கையாக அம்பிகைக்கு அளித்தார். அதில் தனது கையொப்பமும் இட்டார். இச்சம்பவம் நடந்தது 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் ஆகும்.
இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். முருகன் சந்நிதிக்கு அருகில் ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை ஜுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது. கோவிலின் தெற்குப் பக்கம் 63 நாயன்மார்கள் திரு உருவங்கள் உள்ளன.
இலந்தை மரம் இக்கோவிலின் தலவிருட்சமாகும். வேதமே மரவடிவெடுத்து வந்திருப்பதாக ஐதீகம். இக்கோவிலில் உள்ள சனீஸ்வர பகவான் சந்நிதி மிகவும் பெயர் பெற்றது. இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று மக்கள் நம்புகின்றனர். மேலும் இக்கோவிலில் உள்ள அமுதலிங்கம் சிறப்புடையதாகும். லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் எனபது மக்களின் நம்பிக்கையாகும்.
Sunday, February 1, 2009
பவானிகூடுதுறை சங்கமேஸ்வரர் கோயில்
Posted by தங்கமணி at 7:23 PM 1 comments
Subscribe to:
Posts (Atom)